அமெரிக்கா - போர்க்கால நியாயங்கள்

January 19, 2023 in அரசியல் by வெங்கட்ரமணன்4 minutes

நேற்று அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது.

நேற்று அறிவிக்கப்பட்ட அமெரிக்கா ராணுவ முடிவின்படி ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்களோடு தோள்கொடுத்துப் போரிட்ட ஆறு கனேடியர்களின் மீது விமான குண்டுகளை ஏவிக் கொலை செய்த அமெரிக்க ராணுவ வீரருக்கு எந்தத் தண்டனையும் கிடையாது. தொடர்ச்சியாக அமெரிக்கர்களைத் தவிர்த்த பிற உயிர்களுக்கு (அது நட்புபாராட்டும் அண்டை நாடாக இருந்தாலும்கூட) அமெரிக்கர்களால் எந்தவிதமான மதிப்பு தரப்படுகிறது என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் அரக்கத்தனத்தைப் புரிந்துகொள்ள நாம் செப்டம்பர் 11க்குப்பின்-ஆப்கானிஸ்தானுக்குப் போகவேண்டும். 18 ஏப்ரில் 2002. ஆப்கானிஸ்தானில் கனேடியர்கள் “தீவிரவாதத்திற்கு எதிரான” அமெரிக்காவின் போரில் அண்டைநாட்டிற்குத் தோள்கொடுத்து அமெரிக்கார்கள் சொல்லும்வழிகளில் ஓஸாமாவையும், முல்லா முஹம்மது ஓமாரையும் தேடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அமெரிக்காவின் எப்-16 போர்விமானத்திலிருந்து லேசர்கள் வழிசெலுத்தும் ஏவுகணை செலுத்தப்பட்ட ஆறு கனேடியப் போர்வீரர்கள் இறந்துபோனார்கள். போர்க்களத்தில் கனேடியர்கள் சாதல் சாதாரணமான விஷயமில்லை. காரணம், கனடா போர்களைத் தவிர்க்கும் நாடு. அமெரிக்கர்களில் அழைப்பினாலும், நிர்ப்பந்தத்தாலும் (“நீங்கள் எங்களுடன் இல்லையென்றால் எதிர்களுடன் இருக்கிறீர்கள்” - ஜார்ஜ் புஷ் செப்டம்பர் 11க்குப் பின் சொல்லியது) கனடா தன்னுடைய பங்குக்கு தங்கள் சகோதர நாடான அமெரிக்காவிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போரிட படைகளை அனுப்பியது.

இந்த ஏவுகணை சம்பவத்தில் பல அபத்தங்கள் இருக்கின்றன. முதலாவதாக கனேடியர்கள் இரவில் பயிற்சி செய்துகொண்டிருந்த இடம் அபாயமற்றது என்றும் நேச நாடுகளின் படைகள் இருக்கும் இடம் என்றும் தெளிவாகக் குறிக்கப்பட்டிருந்தது. அது போர்க்களமல்ல. இரண்டாவதாக, ஏவுகணையைச் செலுத்துமுன் பறந்து வந்த இரண்டு அமெரிக்க விமானங்களிலிருந்து தலைமைக் கேந்திரத்திற்கு அந்த இடத்தைத் தகர்க்க அனுமதி கேட்டு மறுக்கப்பட்டிருக்கிறது. http://www.cbc.ca/stories/2002/04/18/cdndeaths020418 தலைமைக் கட்டுப்பாட்டு மையம் குண்டுகளைச் செலுத்தவேண்டாமென்று அறிவுரை தந்திருக்கிறது. இதைக் கேட்டு ஒரு விமானி விலகிப் போக மற்றவர், மேஜர் ஹாரி ஷிமிட், போகிற போக்கில் 225 கிலோ எடையுள்ள ஏவுகணைகளைச் செலுத்திவிட்டுப் போயிருக்கிறார்.

கனடாவையே உலுக்கிய இந்தச் சாவுக்கு http://www.cbc.ca/stories/2002/04/18/friendfire020418 மறுநாள்வரை ஜார்ஜ்புஷ் எந்தவிதமான வருத்தமும் தெரிவிக்கவில்லை. (இவை விலைமதிப்பற்ற அமெரிக்க உயிர்கள் அல்லனவே). பின்னர் நடந்த பத்திரிக்கைச் சந்திப்பில் ஒருவர் கோபம் கொண்டு உரக்கக் கேட்டதற்கு நான் கனேடிய பிரதமரிடம் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று சொன்னார். சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகே வெள்ளை மாளிகை இது குறித்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

பின்னர் கனடாவும் அமெரிக்காவும் தனித்தனியாக இந்தச் சம்பவம் குறித்த ஆய்வை நடத்தினார்கள். http://www.cbc.ca/news/background/friendlyfire/reports.html கனடா தரப்பிலிருந்து;

  1. கனேடிய வீரர்கள் மீது எந்தத் தவறும் கிடையாது. இவர்கள் எல்லைகளைத் தாண்டிச் செல்லவில்லை. தவிர்க்கப்படவேண்டிய காரியங்கள் எவையும் செய்யவில்லை.
  2. அமெரிக்க வீரர்கள் மீதுதான் முழுத் தவறும். இதனால் ஆறு கனேடிய வீரர்கள் மரணமடைந்தார்கள், எட்டுப் பேர்கள் காயமடைந்தார்கள்.
  3. கனடா முன்கூட்டிய அந்த இடத்தில் ஆயுதப் பயிற்சி நடத்துவதாக அமெரிக்காவிடம் அறிவித்திருந்தது.
  4. அமெரிக்கர்கள் தங்கள் பலத்தை தவறான வழியில் பயன்படுத்தியிருக்கிறார்கள். நடைமுறைகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டிருக்கிறார்கள்.
  5. குண்டுகளால் தாக்கப்படும்வரை கனேடிய வீரர்களுக்கு இதன் தீவிரம் தெரிந்திருக்கவில்லை.

கிட்டத்தட்ட அதே சமயத்தில் http://www.cbc.ca/news/background/friendlyfire/reports.html அமெரிக்காவும் தன்னுடைய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இதில் நேரடியாகத் தவறுசெய்திருந்த அமெரிக்க விமானியின் பெயர் சுட்டப்பட்டிருந்தது.

  1. இல்லினாய் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஹாரி ஷிமிட்தான் இந்தச் சம்பவத்திற்கு முழுக்காரணம்.
  2. கனேடியர்கள் ஆயுதப் பயிற்சி செய்வது குறித்த தகவல் அமெரிக்க வீரர்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
  3. இந்தச் சம்பவத்திற்கு முழுக்காரணம் அமெரிக்க வீரர்கள் பரிந்துரைக்கப்பட்ட ராணுவ நடைமுறைகளுக்குப் புறம்பாக, தங்களுடைய பலத்தைத் தவறான வழியில் பயன்படுத்தியதுதான்.
  4. விமானப்படை இந்த ராணுவ வீரர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இந்த அறிக்கையில் சம்பவம் நடந்த பின்னணிகள் நேரடியாக விரிவாகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

தொடர்ந்து நடந்த விசாரணைகளில் அமெரிக்க விமானிகள் ஆம்ஃபீட்டாமைன் என்று சொல்லப்படும் http://www.cbc.ca/news/background/friendlyfire/gopills.html போதைமருந்துகளின் பாதிப்பில் இருந்ததாகத் தெரியவந்தது. போதைமருந்து அடிமைகளிடம் ஸ்பீட் என்று செல்லப்பெயர் பெற்ற இந்தவகை மருந்துகள் அமெரிக்க ராணுவத்தில் அனுமதிக்கப்பட்டு வீரர்களால் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரியவந்தது. விசாரனை விமானப்படையின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் போய்விட போதை மருந்து போன்ற சமாச்சாரங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டன.

அமெரிக்க ராணுவத்தின் அறிக்கையில் ஹாரி ஷிமிட்தான் முழுக்குற்றவாளி என்று தெளிவாக அறிவிக்கப்பட்டிருந்ததால் இவர் ராணுவக் காவலில் வைக்கப்படுவார் என்றும் தொடர்ந்து கிட்டத்தட்ட 65 வருடங்கள் வரை வெளிவர வசதியில்லாத கடுஞ்சிறையில் வைக்கப்படலாம் என்றும் பலராலும் ஊகிக்கப்பட்டது.


நேற்று அமெரிக்கா ராணுவத்திற்கும் மேஜர் ஹாரி ஷிமிட்க்கும் இடையே ஒத்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்த்தத்தின்படி இனிமேல் ஷிமிட்க்கு ராணுவக் காவல் கிடையாது. இவர்மீது ராணுவம் நீதிமன்றம் சாராத நடவடிக்கைகளை மாத்திரமே மேற்க்கொள்ளும். அதாவது அவருடைய துறையில் உயர் அதிகாரி ஒருவரின் தீர்ப்புக்கு ஷிமிட் முழுமையாகக் கட்டுப்படுவார்.

இந்த முறையில் http://www.cbc.ca/stories/2004/06/24/schmidt040624 ஷிமிட்க்கு அதிகபட்சமாக முப்பது நாள் வீட்டுக்காவலும் 5,600 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம். (கவனிக்கவும் “அதிகபட்சமாக”). எல்லாவற்றுக்கும் மேலாக இவரால் தொடர்ந்து விமானத்துறையில் பணியாற்ற முடியும். இந்த வழக்கு முழு விசாரணைக்கு வந்திருந்தால் போர்க்களங்களில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் கேவலமான நடைமுறைகள் (வீரர்களுக்குத் தாரளமான போதை மருந்துகள், வீரர்களைத் தொடர்ச்சியாகப் பலமணிநேரம் களத்தில் ஈடுபடுத்தல்,…) வெளிவந்திருக்கக் கூடும். இதுபோன்ற அபத்தங்களை வெளிவரவிடாமல் இருக்க ராணுவம் விமானியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.

அதாவது இப்படி: உங்கள் வீட்டிற்கு ஒரு முழு நேர ஆயுதம்தாங்கிய காவலாளியை நியமிக்கிறீர்கள். அவர் கண்ணயர்ந்த நேரத்தில் திருடன் வீட்டிற்குள் வந்து கொள்ளையடித்துவிட்டு ஒரு கொலையையும் செய்துவிட்டுப் போகிறான். பின்னர் விசாரணைக்கு வரும்பொழுது திருடனும், காவலாளியும் தங்களுக்குள்ளே ஒப்பந்தம் செய்துகொண்டு திருடன் கொள்ளையடித்த பொருள்களில் ஒருபகுதியைத் திருப்பித் தருகிறான். காவலாளில் பொருள்களைத் திரும்பப் பெற்றுக் கொடுத்ததால் கடமை தவறிய குற்றம் கிடையாது. திருடன் கொள்ளையடித்த பொருள்களைத் தானாகத் திருப்பிக் கொடுத்துவிட்டதால் அவனுக்கு மன்னிப்பு. ஆனால், கொலையுண்ட உயிர்??


நேற்று இரவு கனேடியத் தொலைக்காட்சியில் தன் மகனைப் பறிகொடுத்த தந்தை அழுதுவிட்டுப்போனார். கணவனைப் பறிகொடுத்த இளம் விதவை குழைந்தையைக் காட்டி இந்தப் பிஞ்சு முகத்திற்கு நியாயம் கிடையாதா என்று வெடித்தார். என்ன செய்வது? இவையெல்லாம் விலைமதிப்பற்ற அமெரிக்க உயிர்கள் இல்லையே!!


சென்ற ஜூன் 25 அன்று http://www.tamillinux.org/venkat/myblog/archives/000010.html சதாமின் மகன்கள் இருவரையும் எந்த விசாரனைக்கும் விட்டுவைக்காமல் அமெரிக்கா நெஞ்சுக்கு நேராகச் சுட்டுக் கொன்றதைப் பற்றி எழுதும் பொழுது இப்படி எழுதினேன்; “தனக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு இன்னொன்று என்று வல்லான் வகுப்பதற்கு வரலாற்றில் ஒரு பெயர் உண்டு - பாசிசம். வீழ்ச்சிக்கு முந்தைய பாசிச வரலாற்றுப் போக்குகளை இம்மி பிசகாமல் அமெரிக்கா மறு அரங்கேற்றம் செய்து வருகிறது”.

அந்தப் பாசிஸ வரலாற்றின் இன்னொரு அத்தியாம் இது.


தொடர்பில்லாத இன்றைய செய்திகள் சில;

http://www.nytimes.com/2004/06/25/international/middleeast/25IRAQ.html இராக்கில் நூறுபேர் சாவு

http://edition.cnn.com/2004/WORLD/meast/06/25/iraq.main/ அமெரிக்கப் விமானப் படைகள் குண்டுவீசி 25 இராக்கியர்களைக் அழித்தார்கள். அமெரிக்கா இராக்கிற்கு இன்னும் கூடுதல் படைகளை அனுப்பவிருக்கிறது.

முதலில் பதிப்பிக்கப்பட்டது: 25 ஜூன் 2004